வியாழன், 17 பிப்ரவரி, 2011

சித்திரக்காரன் கதை

சற்றேறக்குறைய அந்த ஊரில் வசிக்கும் அனைவரையும் நனைத்துவிட்டு அப்போது தான் அடங்கியிருந்தது மழை. அந்த மழைக்கு அதுவரைக்கும் ஒதுங்கியிருந்த நகரவாசிகள் மீண்டும் நடைபோடத் துவங்கியிருந்தனர். எனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த ஒரு முதியவர் பின்னால் பார்க்காமலேயே தனது குடையை மடக்க முற்பட "பார்த்து... பின்னால் ஆள் வருவது கவனம்..." என்றேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து "வயசாயிடிச்சி தம்பி.... கவனம் சிதறுதுப்பா மன்னித்துக்கொள்" என்றார்.

அந்த நேரத்தில் என் காலடித்தடங்களை அவரை முன்னே போகச்செய்யும் நோக்கில் மெதுவாக்கினேன். அப்பொழுது மீண்டும் மழை பொழியலாயிற்று. இதை எதிர்பார்க்காத நடக்கும் கூட்டம் சிதறியது எல்லாப் புறங்களிலும்.

அந்தத் தெருவின் நேர்நோக்கத்தில் பக்கவாட்டு சிறு சந்து ஒன்று வந்து கலப்பதாய் இருந்தது. அந்த சந்திலிருந்து வெளிப்பட்ட ஒருத்தி என் நடையை உரசுவதைப் போல என்னைக் கிழித்து முன்னேறினாள். அவளை நான் அதுவரைக்கும் அந்த நகரத்தில் பார்த்தவனில்லை. சற்றேறக்குறைய அந்த நகரத்தில் வசிக்கும் எல்லாரையும் நான் அறிந்தவனில்லை என்றாலும் அவள் அந்த நகரத்தின் அன்னிய முகத்துடன் வந்தவளாய் எனக்குத் தெரிந்தாள்.

மழை சற்று வலுத்தது. கிட்டத்தட்ட என்னையும் அவளையும் தவிர மற்ற எல்லாருமே விடுபட்டு போய் இருந்த நேரத்தில் அவள் மழை குறித்த எந்த ஆட்சேபமும் இல்லாது எனக்கு சமமான நேர்கோட்டில் நடந்தாள்.

என்னால் அவளது முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. ஒருவிதத்தில் எனக்கு இது வசதியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். என்னால் அவளது முகம் தவிர்த்த அவளது உடலை அளவெடுத்து என் நியாபகங்களில் அவளது உடல் தகவல்களை சேமித்துக்கொண்ட பிறகு வெளிச்ச நொடியொன்றில் தெரியப் போகும் அவளது முகத்தின் பிம்பத்தை தனியாகப் பார்த்து, அது எனக்கு தேவைப்படும் எனில் அதையும் சேமிக்கலாம். தேவை அற்றது எனில் அதை மட்டும் நீக்கியும் விடலாம்.

இன்னமும் ஏற்ப்படாமல் இருந்த வெளிச்சத்தின் வரவுக்குள் அவளது மழை உடல் எனக்கு இப்பொழுது நன்றாக பரிச்சயமாகிவிட்டிருந்தது. அவள் எனக்கு வெகு அருகாமையில் நடந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு தெரிந்து இருந்தது, குறைந்த பட்சம் அவளுடன் அப்பொழுதைக்கு நடந்து கொண்டும், தொடர்ந்து கொண்டும் இருந்தது ஒரு ஆடவன் என்ற முறையில் என்னை.

அதிக மழையில் நடப்பது கடினம் என இதுவரைக்கும் நம்பியிருந்தவன் நான் என்ற படியால், எனக்கு சமமான புள்ளிகளின் நேர்கோடு ஒன்றில் அனாயாசமாக மழையை அதிகாரமாய் நுகர்ந்தபடி நடை போடும் அவளை, அவள் முகத்தை பார்ப்பது மூலம் அவளது பிம்பம் குறித்த முழு தீர்மானத்துக்கு வர முடியும் என்ற காரணத்தினாலும், அது தவிர்த்து அவளை அறியும்வாய்ப்பு எனக்கு இல்லை என்கிறபடியாலும் நான் அவள் முகத்தை இப்பொழுது பார்க்க விரும்பினேன்.

அதுவரைக்கும் எனக்கு அறிமுகம் இல்லாத ஒருத்தியாய் ஒரு பேரழகி அங்கே திரும்பினாள். அவள் முகத்தைப் பார்த்ததும் எனக்கு அதுவரைக்கும் அழகியர் குறித்து இருந்த அனுமானங்களையெல்லாம் அவள் மீட்டுக் கொண்டு தன் பற்றிய ஒற்றை அனுமானத்தை விட்டுச் செல்பவளாய் சிரித்தாள்.

பிரேதங்களையும் எழச்செய்யும் மாயச்சிரிப்பு அவளது. அவள் பேசத் தொடங்குமுன் என்னிடம் சொன்னாள். "என் மொழி உனக்குப் புரியாது."

நான் கேட்டேன் "நாம் எப்படி சம்பாஷிப்பது...?"

அவள் சிரித்தாள். "என்னுடன் நடப்பதை நீ நிறுத்தினால் தான் நான் கிளம்ப முடியும்"

நான் கேட்டேன் "அப்படியானால்... நீ தான் மழையா...?"

அவள் அதற்குப் பதில் சொல்லவில்லை. கண்களில் மழைத்துளிகள் வழிந்த ஒற்றைக் கணத்தில் அவள் மழையாகி இருந்தாள். நான் நின்று கொண்டு இருந்தேன். அதற்குப் பின்னர் நான் மெல்ல சித்திரங்கள் எழுதப் பழகினேன். எனக்கு அந்த நகரத்தின் அமானுஷ்யம் பிடிக்கவில்லை. என்னால் அந்த நகரத் தெருக்களில் மழை பற்றிய ஞாபகத்தில் மழையின் தேகக்குறிப்புகளை மனனம் செய்து கொண்டு மழையற்ற பொழுதுகளில் அலைய முடியாதவனாய் நான் அங்கிருந்து வெளியேறினேன்.

இப்போது நான் வந்து சேர்ந்து இருந்த ஊர் மிகவும் குறுகலான சிறு தெருக்களை உடையது. இங்கே வசிப்பவர் யாரையும் நான் அறிந்தவனில்லை. இவை தவிரவும் அப்போது தான் மழைக் காலம் அந்த ஊரில் முடிவடைந்து இருந்த தகவலும் எனக்குப் பெரும் ஆறுதலாய் இருந்தது.

எனது வசிப்பிடம் காகிதங்களால் சூழப்பட்டு இருந்தது. என் சித்திர முயற்சிகளை பெரும் விலை கொடுத்து அந்த ஊரின் செல்வந்தர்கள் வாங்கிக் கொண்டனர். எனக்கு வர்ணங்களும், சித்திரம் தீட்டுவதற்கான உப பொருட்களும் தடையின்றி கிடைத்திடவும் வழி செய்தனர்.

என் சித்திர முயற்சிகளுக்கு கிடைத்த பொருளும், எனக்கு அந்த ஊர் தனவான்கள் அளித்த புகழும் எப்பொழுது நான் என் சித்திர முயற்சிகளை காகிதங்களாய் காற்றில் எறிவேன் என ஒரு கூட்டம் என் வசிப்பிடத்துக்கு அருகிலேயே காத்திருந்தது.

என் சித்திர முயற்சிகளில் எந்த ஒன்றையும் நான் எனக்கென வைத்து கொள்ளவே இல்லை. என்னால் ஒரு சித்திரத்தை தீட்டிவிட முடியாதெனும் எண்ணத்தின் ஆழத்தில் கலைந்து பறந்தன காகிதப்பிரதிகள்.

அப்புறமாக அந்த ஊரில் துவங்கியது மழைக்காலம். அந்த வருடம் மழை பொய்க்கும் என எனக்கு ஆருடம் சொல்லப்பட்டிருந்தது. அந்த ஆருடங்களின் மீது கெக்கலித்துப் பொழிந்தது முதல் மழை.

போதுமான சித்திரங்களை சேகரித்துவிட்டவர்களாய் வருகையை நிறுத்திக் கொண்டனர் தனவான்கள். அவர்களைப் போலவே வேறு வேறு வேலைகள் தமக்கிருப்பதாய் சொல்லிக்கொண்டு வருகையை நிறுத்தினர் கூட்டத்தினர்.

நான் தனித்து விடப்பட்டேன். ஒருவகையில் இது எனக்குப் பிடித்து இருந்தது. கூச்சலின் சூழல் அற்றுப் போனதாலும் மழைக்காலம் துவங்கிவிட்டதாலும் என்னால் ஒரு முழுமையான சித்திரத்தை வரைய முடியும் என்று நம்பினேன்.

மழையில் காலாற நடக்கலாமென மழையில் கிளம்பினேன். அந்த ஊரின் சிறு சிறு தெருக்களில் நடை பழகினேன்.எதிரில் அந்த அதி தேவதை வந்து நின்றாள்.

உன்னை வரைவதற்கான சாத்தியங்களில் ஒற்றை சித்திரத்தை வரைந்து விடுவதற்காகவே என் பொழுதுகளை செலவழிப்பதாகவும் இது வரை எந்த பயனும் கிட்டவில்லை எனவும் எனக்கு எதாவது மாற்று வழி இருந்தால் சொல்லுமாறும் இறைஞ்சினேன்.

அவள் சொன்னாள்... "மழையின் தேகத்தை மழையில் தான் வரையமுடியும். மழையில் வரைவதற்கான வர்ணங்கள் வேறு"

நான் ஒரு கையில் சுருட்டி வைத்த காகிதத்தைப் பிடித்துக்கொண்டேன். ஒரு காலை தரையில் பதித்து தலை சாய்த்து வணங்கினேன். மழை தேவதை என் வலது கரத்தைப் பிடித்தாள், தனது வலக்கரத்தால். மறைத்து வைத்து இருந்த தனது இறக்கைகளை வெளியில் விரித்து படபடத்தவாறு அவளும் நானும் மழையின் விழுதுகளைப் பற்றியவாறு வேகமாய் மேலேறி மழைக்குள் நுழைந்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக