வியாழன், 17 பிப்ரவரி, 2011

அவள் அப்படித்தான்

என்னைப் பின்தொடர்கிறாய்.
எனது நாட்குறிப்பை நானற்ற தனிமைகளில்
எடுத்துப் படிக்கிறாய்.

எதையோ தொலைத்து விட்ட பாவனையில்
என் புத்தக அலமாரியை
குடைகிறாய்.

நான் பயணிக்கையில் உடனுக்குடன்
செய்தி சேகரிக்கிறாய்
என் இருப்பு குறித்து.

எனது செல்பேசிக்கு வந்த
குறுந்தகவல்களை
மனனம் செய்கிறாய்.

சுற்றிவளைத்து எதனையோ
கேட்க வந்து மௌனித்து
முழுங்குகிறாய்.

உன் கரங்களில் அடைக்கப்பட்டிருக்கும்
எனது சிறைக்காவலை உறுதி செய்வதற்கே
இத்தனையும் செய்கிறாய்....

விரல்களின் இடைவெளி புகுந்து
மனம் விட்டு மனம் தாவிய
மாயக்குரங்கின் சூட்சுமம் அறியாமல்.

நினைவு நதி

ஒரு சிலுவை போன்றதொரு
பாதைகளின் கூடலில்
நம் சந்திப்பு நிகழ்ந்தது.

தள்ளி நின்று நகம் கடித்தபடி
என்னை எங்கே சந்தித்தாய்
என உன் நினைவு அட்டைகளை
புரட்டிப்பார்த்து தோற்கிறாய்.

எதேனும் ஒரு சம்பவத்தின்
பின்னால் உள்நகர்ந்து என்னைக்
கண்டறியும் உன் உத்தேசங்களும்
பலன் தரவில்லை

என் பெயர் என்னவாயிருக்கும்
என நீ குழம்பித்தவிப்பதுவும்
எனக்குத் தெரிகிறது.

ஒற்றை நொடியில் எனக்குள்
உன் நினைவுகளெல்லாமும்
நான் மீட்டிருந்தேன்.

நீ குழப்பத்துடனேயே
கிளம்பிப் போனதைப்பார்த்தபடி.

உனக்கு உதவி இருக்க முடியும்.
ஒடோடி வந்து உன் பெயர் சொல்லி
என்னை நினைவுறுத்தி.

செய்பவனாயில்லை.

எப்பொழுதேனும் ஒரு விபத்து
போல நானுன் ஞாபகங்களை
இடறக்கூடும்.

அது நிகழாவரை,
எனக்கும் என்னை மறந்துவிட்டதாய்
பாவனை செய்யப்
பழகிக் கொள்கிறேன்.

வண்ணமயமாதல்

அடிக்கடி நிறம் மாறுகின்றனர்
என் இரண்டு புறச் சகாக்கள்.
நிறம் மாறல் அர்த்தம் பொதிந்ததாகிறது.
இயல்பழிதல் இயல்பாகிப் போன
சதுரத் தீவு ஒன்றில்.

ஆறிப் போன காயமொன்றின்
பழைய குருதித்துணுக்குகளாய்
உதிர்ந்து விழுகிறது இதற்கு
முந்தைய நிறம்.

அடிக்கடி நிறம் மாறுகின்றனர் சகாக்கள்.
என்ன காரணம் எந்த நிறம்
தேர்ந்தெடுப்பதில் குழப்பமின்றி
புதியதாய் ஒரு நிறம் அகப்பட்டால் போதும்.
நிறம் மாறல் நிகழுகிறது.

தம்மைப் போல மாறியவர்களைக்
கண்டதும் நட்பு கொப்பளிக்க
கரங்குலுக்கலும் உடல் தழுவலும்
செய்து கொள்கிறார்கள்.

மழைக்காலமொன்றின் வருகையில்
அடிக்கடி அழிந்துவிட்டாலும்
தங்கள் நிறத்தைத் தக்கவைக்கவே
செய்துவிடுகின்றனர்
சகாக்கள்.

முகங்களைக் கலைத்துப் போட்டு
மழைகளை எதிர்கொள்வதும்
பழகிவிட்டது சகாக்களுக்கு.

மழை வலுக்க வலுக்க
ரசவாதிகளின் ஆய்வுக்கூடங்கள்
கண்டுபிடித்த புதுரக நிறங்கள்
காப்பாற்றுகின்றன சகாக்களை.

மழையை வென்று விட்டதாக
வானம் பார்த்துக் கெக்கலிக்கின்றனர்
சகாக்கள்.

மழைக்கும்
நிறமாறிகளுக்குமான யுத்தத்தின்
கடைசி தினமொன்றில்
தங்களைப் பூச்சழித்து
அம்மணமாக்கின குற்றத்திற்காய்,
மழையின் சிசுக்களை
கழுத்தறுத்து கொன்றழித்தனர் இடவலர்கள்.

மழையை வெற்றி கொண்டதன்
பிறகு நிறம்மாறல் பேருருக்கொண்டது
நிறங்களின் உலகில்.

நிறம்மாறல் பற்றிய
போதனை வகுப்புகள்
நடந்தேறுகின்றன.

சந்ததிகளுக்கு நிறம்மாறல்
தெய்வீகமென போதிக்கப்பட்டது.

நிறம் மாறத் தெரியாதவர்களுக்கும்
மறுத்தவர்களுக்கும்
தலைகளைக் கொய்தல்
தண்டனையானது.

வீதியில் வீசப்பட்ட தலைகளைப்
பச்சோந்தியினங்கள் தின்று
பசியாறிவிடுவதற்குள்
நிறச்சாயங்களை
முண்டங்களுக்கு பூசியபடி
கொள்கை பிழைத்ததெனக்
கொண்டாடி மகிழ்கின்றனர்
எனது பழைய சகாக்கள்.

நிறம் மாறல் நியதியாகிறது.
இயல்பழிதல் இயல்பாகிப் போன
சதுரத்தீவு ஒன்றில்.

எனக்கு மட்டும் காலநீட்டிப்பு
வழங்கப்பட்டிருக்கிறது.
நிறம் மாறிக்கொள்வதற்கு.

என்னிரு சகாக்கள்
நிறம் மாறிய கதையில்
பலகாலம் நான் மௌனித்திருந்தது
கேள்விகளை எழுப்பியிருந்தது.

நிறம் மாறலுக்கு நானொன்றும்
எதிரியில்லை.
மாறாதிருத்தல் பெருந்துக்கமெனக்கு.
மாறிவிடக் கொள்ளை ஆசை.

இருந்தபோதிலும்....,
நிறம் மாறலுக்கு
அவசியமான
ஆதி நிறமொன்று
எனக்கு அகப்படாமற் போன
காரணத்தால்
பாவியாகிப் போனேன்.

எட்டும் மழை

கொட்டி விட்ட கோபமாய்
மழையீரம்
மிஞ்சிய சாலைகளில்.

***

ஊடலின் இறுதி வார்த்தையாய்
இலை தடுக்கி மண்சரியும்
மழை

****

நீ வராமற் போனதற்கு
மழை காரணம்.
நான் வந்து போனதற்கும்.

***

சட்டைக்குள் நீ தந்த
வாழ்த்து அட்டை.
என்னை ஒதுங்கச் சொல்கிறது
மழை.

***

யார் அனுப்பிய
காகிதக்கப்பல்?
என் வாசல் துறைமுகத்தில்..

***

தேடி வரும் ஓரே
தேடல்,
மழை.

***
எண்ணத் தெரியாத பாடகனாய்
எல்லாரையும் நனைக்கும்
மழை.

***

மொழிகளுக்கு
முந்தைய
மௌனத்தின் கூச்சல்
மழை

***

மழை பற்றி
பேசியாயிற்று.
மழையைப்
பேசுதல் முடியாது.

மூன்று தனிமைகள்

இன்று இரவு..இன்னொரு இரவு

மதுக்கோப்பைகள் நிரம்பி வழியும்
பிரத்யேக இரவின்
புகைசூழ்த்தனிமை
இருளில்
எனக்கு எதிரான காலி இருக்கையை
நீ வந்து
நிரப்ப மாட்டாயா
என
ஏங்கி இருந்தேன்.
வீதி சூடும் பூக்களெல்லாம்
உனதான
நேற்றைய மலர்கள்
என்ற
நீதியறியாமையில்.

................................................................

நிராகரிப்பு

இன்னமும் நுட்பமாக நினைவிருக்கிறது.
எது என்னவென அறியாத
நம் இளம்பிராயத்தில்
என் பொருளொன்றைப் பெற்றுக்கொண்டு
திருப்பித்தந்து விடுவதாகவோ
என்னையும் ஏதோ ஒரு செயலில்
உட்படுத்துவதாகவோ
விட்டுத்தந்ததன் பரிசாக
எதையோ கிடைக்கச்செய்வதாகவோ
சீக்கிரம் திரும்பி விடுவதாகவோ
உன் மூலமாய்த் தொடங்கியது.
நிராகரிக்கப்படுவது.

இப்பொழுதெல்லாம்
உடன் இனம்காணுகிறேன்.
நிராகரிக்கப்பட்டதை.

என்னை நிராகரித்து
எதையோ எதிர்பார்க்கிறவரிடம்
முன்மொழிகிறேன்
உனது பெயரை.

உன் மூலமாய்த்
தொடங்கிய
நிராகரிப்பின் பெருவலியை
தர முயன்று தோற்றவர்க்கெல்லாம்.

................................................................................

உன் காதல்.

படுத்த படுக்கையில்
கண்மூடிக் கிடக்கையில்
சொட்டுச்சொட்டாய் மூத்திரம்
பிரியும்
ஒற்றைக் கணத்தின்
தென்றலை
ஈரத்தை
வாடையை
இன்ன பிறவற்றை
உணர முடியாத
மௌனத்தில் துளிர்க்கும்
ஒருதுளிக்
கண்ணீர்,
வாழும் ஆசை,
எனக்கான பிரார்த்தனை
உன் காதல்.

சித்திரக்காரன் கதை

சற்றேறக்குறைய அந்த ஊரில் வசிக்கும் அனைவரையும் நனைத்துவிட்டு அப்போது தான் அடங்கியிருந்தது மழை. அந்த மழைக்கு அதுவரைக்கும் ஒதுங்கியிருந்த நகரவாசிகள் மீண்டும் நடைபோடத் துவங்கியிருந்தனர். எனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த ஒரு முதியவர் பின்னால் பார்க்காமலேயே தனது குடையை மடக்க முற்பட "பார்த்து... பின்னால் ஆள் வருவது கவனம்..." என்றேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து "வயசாயிடிச்சி தம்பி.... கவனம் சிதறுதுப்பா மன்னித்துக்கொள்" என்றார்.

அந்த நேரத்தில் என் காலடித்தடங்களை அவரை முன்னே போகச்செய்யும் நோக்கில் மெதுவாக்கினேன். அப்பொழுது மீண்டும் மழை பொழியலாயிற்று. இதை எதிர்பார்க்காத நடக்கும் கூட்டம் சிதறியது எல்லாப் புறங்களிலும்.

அந்தத் தெருவின் நேர்நோக்கத்தில் பக்கவாட்டு சிறு சந்து ஒன்று வந்து கலப்பதாய் இருந்தது. அந்த சந்திலிருந்து வெளிப்பட்ட ஒருத்தி என் நடையை உரசுவதைப் போல என்னைக் கிழித்து முன்னேறினாள். அவளை நான் அதுவரைக்கும் அந்த நகரத்தில் பார்த்தவனில்லை. சற்றேறக்குறைய அந்த நகரத்தில் வசிக்கும் எல்லாரையும் நான் அறிந்தவனில்லை என்றாலும் அவள் அந்த நகரத்தின் அன்னிய முகத்துடன் வந்தவளாய் எனக்குத் தெரிந்தாள்.

மழை சற்று வலுத்தது. கிட்டத்தட்ட என்னையும் அவளையும் தவிர மற்ற எல்லாருமே விடுபட்டு போய் இருந்த நேரத்தில் அவள் மழை குறித்த எந்த ஆட்சேபமும் இல்லாது எனக்கு சமமான நேர்கோட்டில் நடந்தாள்.

என்னால் அவளது முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. ஒருவிதத்தில் எனக்கு இது வசதியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். என்னால் அவளது முகம் தவிர்த்த அவளது உடலை அளவெடுத்து என் நியாபகங்களில் அவளது உடல் தகவல்களை சேமித்துக்கொண்ட பிறகு வெளிச்ச நொடியொன்றில் தெரியப் போகும் அவளது முகத்தின் பிம்பத்தை தனியாகப் பார்த்து, அது எனக்கு தேவைப்படும் எனில் அதையும் சேமிக்கலாம். தேவை அற்றது எனில் அதை மட்டும் நீக்கியும் விடலாம்.

இன்னமும் ஏற்ப்படாமல் இருந்த வெளிச்சத்தின் வரவுக்குள் அவளது மழை உடல் எனக்கு இப்பொழுது நன்றாக பரிச்சயமாகிவிட்டிருந்தது. அவள் எனக்கு வெகு அருகாமையில் நடந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு தெரிந்து இருந்தது, குறைந்த பட்சம் அவளுடன் அப்பொழுதைக்கு நடந்து கொண்டும், தொடர்ந்து கொண்டும் இருந்தது ஒரு ஆடவன் என்ற முறையில் என்னை.

அதிக மழையில் நடப்பது கடினம் என இதுவரைக்கும் நம்பியிருந்தவன் நான் என்ற படியால், எனக்கு சமமான புள்ளிகளின் நேர்கோடு ஒன்றில் அனாயாசமாக மழையை அதிகாரமாய் நுகர்ந்தபடி நடை போடும் அவளை, அவள் முகத்தை பார்ப்பது மூலம் அவளது பிம்பம் குறித்த முழு தீர்மானத்துக்கு வர முடியும் என்ற காரணத்தினாலும், அது தவிர்த்து அவளை அறியும்வாய்ப்பு எனக்கு இல்லை என்கிறபடியாலும் நான் அவள் முகத்தை இப்பொழுது பார்க்க விரும்பினேன்.

அதுவரைக்கும் எனக்கு அறிமுகம் இல்லாத ஒருத்தியாய் ஒரு பேரழகி அங்கே திரும்பினாள். அவள் முகத்தைப் பார்த்ததும் எனக்கு அதுவரைக்கும் அழகியர் குறித்து இருந்த அனுமானங்களையெல்லாம் அவள் மீட்டுக் கொண்டு தன் பற்றிய ஒற்றை அனுமானத்தை விட்டுச் செல்பவளாய் சிரித்தாள்.

பிரேதங்களையும் எழச்செய்யும் மாயச்சிரிப்பு அவளது. அவள் பேசத் தொடங்குமுன் என்னிடம் சொன்னாள். "என் மொழி உனக்குப் புரியாது."

நான் கேட்டேன் "நாம் எப்படி சம்பாஷிப்பது...?"

அவள் சிரித்தாள். "என்னுடன் நடப்பதை நீ நிறுத்தினால் தான் நான் கிளம்ப முடியும்"

நான் கேட்டேன் "அப்படியானால்... நீ தான் மழையா...?"

அவள் அதற்குப் பதில் சொல்லவில்லை. கண்களில் மழைத்துளிகள் வழிந்த ஒற்றைக் கணத்தில் அவள் மழையாகி இருந்தாள். நான் நின்று கொண்டு இருந்தேன். அதற்குப் பின்னர் நான் மெல்ல சித்திரங்கள் எழுதப் பழகினேன். எனக்கு அந்த நகரத்தின் அமானுஷ்யம் பிடிக்கவில்லை. என்னால் அந்த நகரத் தெருக்களில் மழை பற்றிய ஞாபகத்தில் மழையின் தேகக்குறிப்புகளை மனனம் செய்து கொண்டு மழையற்ற பொழுதுகளில் அலைய முடியாதவனாய் நான் அங்கிருந்து வெளியேறினேன்.

இப்போது நான் வந்து சேர்ந்து இருந்த ஊர் மிகவும் குறுகலான சிறு தெருக்களை உடையது. இங்கே வசிப்பவர் யாரையும் நான் அறிந்தவனில்லை. இவை தவிரவும் அப்போது தான் மழைக் காலம் அந்த ஊரில் முடிவடைந்து இருந்த தகவலும் எனக்குப் பெரும் ஆறுதலாய் இருந்தது.

எனது வசிப்பிடம் காகிதங்களால் சூழப்பட்டு இருந்தது. என் சித்திர முயற்சிகளை பெரும் விலை கொடுத்து அந்த ஊரின் செல்வந்தர்கள் வாங்கிக் கொண்டனர். எனக்கு வர்ணங்களும், சித்திரம் தீட்டுவதற்கான உப பொருட்களும் தடையின்றி கிடைத்திடவும் வழி செய்தனர்.

என் சித்திர முயற்சிகளுக்கு கிடைத்த பொருளும், எனக்கு அந்த ஊர் தனவான்கள் அளித்த புகழும் எப்பொழுது நான் என் சித்திர முயற்சிகளை காகிதங்களாய் காற்றில் எறிவேன் என ஒரு கூட்டம் என் வசிப்பிடத்துக்கு அருகிலேயே காத்திருந்தது.

என் சித்திர முயற்சிகளில் எந்த ஒன்றையும் நான் எனக்கென வைத்து கொள்ளவே இல்லை. என்னால் ஒரு சித்திரத்தை தீட்டிவிட முடியாதெனும் எண்ணத்தின் ஆழத்தில் கலைந்து பறந்தன காகிதப்பிரதிகள்.

அப்புறமாக அந்த ஊரில் துவங்கியது மழைக்காலம். அந்த வருடம் மழை பொய்க்கும் என எனக்கு ஆருடம் சொல்லப்பட்டிருந்தது. அந்த ஆருடங்களின் மீது கெக்கலித்துப் பொழிந்தது முதல் மழை.

போதுமான சித்திரங்களை சேகரித்துவிட்டவர்களாய் வருகையை நிறுத்திக் கொண்டனர் தனவான்கள். அவர்களைப் போலவே வேறு வேறு வேலைகள் தமக்கிருப்பதாய் சொல்லிக்கொண்டு வருகையை நிறுத்தினர் கூட்டத்தினர்.

நான் தனித்து விடப்பட்டேன். ஒருவகையில் இது எனக்குப் பிடித்து இருந்தது. கூச்சலின் சூழல் அற்றுப் போனதாலும் மழைக்காலம் துவங்கிவிட்டதாலும் என்னால் ஒரு முழுமையான சித்திரத்தை வரைய முடியும் என்று நம்பினேன்.

மழையில் காலாற நடக்கலாமென மழையில் கிளம்பினேன். அந்த ஊரின் சிறு சிறு தெருக்களில் நடை பழகினேன்.எதிரில் அந்த அதி தேவதை வந்து நின்றாள்.

உன்னை வரைவதற்கான சாத்தியங்களில் ஒற்றை சித்திரத்தை வரைந்து விடுவதற்காகவே என் பொழுதுகளை செலவழிப்பதாகவும் இது வரை எந்த பயனும் கிட்டவில்லை எனவும் எனக்கு எதாவது மாற்று வழி இருந்தால் சொல்லுமாறும் இறைஞ்சினேன்.

அவள் சொன்னாள்... "மழையின் தேகத்தை மழையில் தான் வரையமுடியும். மழையில் வரைவதற்கான வர்ணங்கள் வேறு"

நான் ஒரு கையில் சுருட்டி வைத்த காகிதத்தைப் பிடித்துக்கொண்டேன். ஒரு காலை தரையில் பதித்து தலை சாய்த்து வணங்கினேன். மழை தேவதை என் வலது கரத்தைப் பிடித்தாள், தனது வலக்கரத்தால். மறைத்து வைத்து இருந்த தனது இறக்கைகளை வெளியில் விரித்து படபடத்தவாறு அவளும் நானும் மழையின் விழுதுகளைப் பற்றியவாறு வேகமாய் மேலேறி மழைக்குள் நுழைந்தோம்.

சக்திஜோதியின் 3 கவிதை நூல்கள் - ஒரு பார்வை

வெகு காலமாக கவிதைகளை வாசித்து வருபவன் என்கிற செருக்கு, எனக்குள்ளிருந்து அவ்வப்பொழுது வெளிப்பட்டு வந்தே இருக்கிறது. உலகத்திலிருக்க கூடிய அத்தனை கவிதைகளையுமே வாசித்து முடித்தவன் போன்றதொரு அகத்தொனியை அது அவ்வப்பொழுது ஏற்படுத்துவதை வசதியாக மறந்து போயும் இருந்து இருக்கிறேன்.

என் இரட்டை ஆளுமைகளில் நான் தெரிவிக்க மறுக்கும் எனது அகத்தை கட்டமைத்ததில் கவிதைகளுக்கு மிக அதிகமான பங்கு இருக்கிறது என்பது ஒன்றை தவிர,மிகச் சமீபத்தில் தான் எனக்கு எழுத தெரியும் என்பது எனக்கு தெரியும்.

ஆனாலும்,அன்னிய நிலமொன்றில் தவற விட்டபயண ஊர்திக்கு மாற்று வாகனம் ஒன்றை எதிர்நோக்கி,அந்த நிலத்தின் மைந்தர்களுக்கு நடுவிலான கூட்டத் தனிமை ஒன்றில் வெளிப்பட்டு சிதறிவிடுமோ எனத்தேக்கி வைத்த அச்ச அடுக்குகளை எல்லாம் மறைத்து கொண்டு காலம் தின்று கால் கடுக்கும் ப்ரயாணி ஒருவன், எங்கனம் அந்த நேரம் அந்த இடத்தில் கடைவிரித்து தனக்கு தெரிந்த வித்தைகளை அவிழ்த்துக் கொட்டி காசுக்காக கையேந்தும் வித்தகனின் தட்டில் பலமாக தன்னிடமிருக்கும் நாணயங்களில் சிலவற்றை சிந்தி வைப்பானோ...அது போலத் தான் அந்த பிரயாணியை ஒத்த மனநிலை தான் எனக்கு இருந்தது,

சக்திஜோதி என்னும் கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புக்களை அடுத்தடுத்து படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகச் சமீபத்தில்தான்.இதற்கு முன் அவரது எந்த கவிதையையும் படித்ததில்லை என்ற பெருந்தகுதியுடன் அவரது நிலம் புகும் சொற்கள்/கடலோடு இசைத்தல்/எனக்கான ஆகாயம் என்ற மூன்று தொகுப்புக்களை அடுத்தடுத்து படித்து முடித்தேன்.

சூரியனுக்கு மட்டுமல்ல/அதைச் சுற்றிச் சுற்றி வருவது/நான் தானெனஎனக்கும் தெரியும்/ அகத்திலிருந்து கிளம்பி நெற்றியிலறையும் நேரடியான வரிகளில்,காலம் தின்றது போக மிச்சம் கிடைத்த வாழ்க்கையின் நகர்தலை தோற்றப்பிழை என்ற கவிதை சொல்கிறது.

எங்கும் காணோம் நமதன்பின் வெளியை/ஒரே ஒரு முறை என்னைப்பார்/நமக்கான நட்சத்திரத்தை /உன் விழிகளில் இருந்து உருவாக்குகிறேன் அன்பின் நிலம் என்னும் கவிதை மேற்சொன்ன வரிகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.சக்தி ஜோதியின் கவிதைகள் அன்பு வயப்பட்டவையாக இருக்கின்றது அதிர்ஷ்டவசமே என்றெண்ணத் தோன்றுகிறது.ஆழ்மனத்தின் எல்லாப் பரப்பிலும் அன்பு ஒரு ஊற்றாகப் பெருகாதவரை இந்த வரிகள் தோன்றச் சாத்தியமே இல்லை.

உன்னைப் பிரிகையில்/பெருகும் துயரத்திற்குக் /குறைந்தது இல்லை/நினைவின் மகிழ்வு.என்கிறார்.சக்திஜோதிக்கு கைவந்திருக்கிற நினைத்து மகிழ்தல் என்பது பெரும்பாலும் ஆண்டாளின் தனிமையின் மொழிச்செறிவுக்கு நிகரானது.படிக்கிறவர்களுக்குள் ஒரு நெகிழ்தலையும் நிறைவையும் ஏற்படுத்தும் சக்தி ஜோதி,அதற்காக கையில் எடுப்பது ஒவ்வொரு முறையும் சாதாரணமான அன்பை, பிரிவை, தனிமையை, காதலை,ஊடலை... இவை காலகாலமாக இலக்கியங்களில் அடித்துத் துவைக்கப்பட்டவையே,இருந்தாலும் அசாதாரணமான ஒரு துயரை,ஒப்பும் மிகுதியும் இல்லாத உணர்வுகளை சொல்ல வரும் பொழுது அதே அன்பும் தனிமையும் வேறு ஒரு வண்ணத்துக்கு மாறிவிடுகின்றன.தொலைந்த குழந்தை கையில் கிடைக்கும் கணத்துக்கு ஒப்பான மகிழ்தல், சக்திஜோதியின் அக உலகில் உலா வரும் பொழுது நமக்கும் இடம் பெயர்கிறது.

காதல் என்ற பொருளை சக்திஜோதி மிக அனாயாசமாகக் கையாள்வது இந்த நிலம் புகும் சொற்கள் தொகுப்பின் முழுமையிலும் நம்மால் உணர முடிகிறது.குறிப்பிட்ட காலத்துக்கு எலும்புகள் நொறுங்கக் காதலித்து முடித்து,அதற்குப் பின்னதான வாழ்க்கையில் எந்த உருவத்திலும் காதலின் ப்ரதிகள் உள்நுழையா வண்ணம் சர்வசித்தமாய் தன்னையே வேவுபார்க்கக் கூடிய மன நடுக்கம் மிகுந்து கிடக்கும் தற்பொழுதைய பொதுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறையில், மணல்மேலோடும் பளிங்கு நதியாய் சிலிர்க்க வைக்கிறது சக்திஜோதியின் வரிகளில் காதல்.

இரவு நண்பனாகி வெகு நாட்களாயிற்று என்கிற வரிக்குள் இருக்கும் இரவுக்கும் தனக்குமான புரிதலை அழகுறச் சொல்கிறார்.அந்தரங்க முகம் கவிதையில்.

.நீங்குதல் கவிதையில்.நீ/வந்து நீங்கியபின்/உடல் தணலாகக் கொதிக்கின்றது/பின்/உன் நினைவுக்காற்று/என்னைக் குளிர்விக்கக்க/என்னை மீட்டுக் கொள்கின்றேன்/அந்த இரவில்.காமத்துக்கும் காதலுக்குமான இயல்பான இடைவெளியில் ஊடுருவும் கண்ணாடி இழைகளை,இலகுவாகக் கட்டவிழ்க்கின்றன இந்த வரிகள்.அழகுணர்ச்சி விரவ அதே நேரத்தில் மொழியைக் கடந்து போகிற படைப்பாளி என்னும் பொறுப்புணர்வை நன்கு புரிந்தவராய் கவிதைப்படுத்துகிறார்.

மனத்தட்டுப்பாடில்லாத மனம் தராத மகிழ்வை, வெட்கத்தை வெறும் ஒரு பெயர் தருவதாக கிளர்ந்தெழுகிறார். என்னோடு கலந்தால் என்னை அறிந்து கொள்வது எளிதென உனக்குச்சொல்வதற்கு ஒருவரும் இல்லையா? என வினவுகையில் தனிமையில் தாபத்தின் நீட்சியை நம் கண் முன் நிறுத்துகிறார்.

உனது முத்தம் பெருகி அதில் மூழ்கிக்கொண்டிருக்கும் என்னை உனது இன்னும் ஒரு முத்தத்தை தவிர எது காப்பாற்றும்..? என்கிறார் முத்தம் என்னும் தலைப்பில்.ஒரு குமிழியை இன்னொரு குமிழி துரத்திச் சென்று அதை உடைத்து தானும் உடைபடுவதை சிதைவு என எங்கனம் கொள்ள முடியாதோ...அது போன்ற தரிசனம் தான் முத்தத்தின் வாயிலாக நமக்கு ஏற்படுகிறது.

இவையெல்லாவற்றையும் தனக்குள் விழுங்கிக்கொள்வது போல் ஒவியம் என்கிற கவிதை....

என்னைச் சித்திரமாக
வரைந்து கொண்டிருக்கும்
உனக்குத் தெரியாது

நான்
எத்தனை முறை
வரையப் பட்டுள்ளேன் என்பதும்

ஒவ்வொரு முறையும்
என் முகம்
எவ்வாறு மாறிப் போனது என்பதும்

நான்
யார் யாருக்கோ அடையாளமாக
இருக்கையில்

உன் நினைவில்
என்னிருப்பை உணர்கின்றேன்.

நீயும்
ஒரு சித்திரத்தை வரைந்து விடாதே.

இதன் ஆரம்ப வரிகளின் அழகான எதிர்மாறலாய் முடிவு வரிகள் இருப்பது சக்திஜோதியின் மொழிவன்மையை பெரிதாய் புலப்படுத்துகிறது.ஒரு தனிமைக்குள் இத்தனை திடமான உணர்வுகளா என நம்மை வியக்க வைக்கின்றன நிலம்புகும் சொற்கள் தொகுப்பின் கவிவரிகள்.
.........................................................................................................................................................................................................................................


கடலோடு இசைத்தல் என்னும் தனது இரண்டாவது தொகுப்பில் இயற்கையை காதலின் பெருவெளியில் பொருத்திப் பார்க்கிறார் சக்திஜோதி. கடலுக்குள் புகுந்து வெளிப்படும் ஒற்றைக்கணத்தில் பரபஞ்சச் சுவையும் பழமையின் வாசனையும் வெளிப்படுவதாக சிலாகிக்கிறார்.

கடலோடு இசைத்தல் என்னும் கவிதையில் நிலத்தின் கடல் கடலிலும் கடலின் நிலம் நிலத்திலும் கிடப்பதாக சமன்பட்டுத்திப் பார்க்கையில் கடல் என்பதை நம் நிலம் சார் வாழ்க்கையினுள் கொண்டு வந்து விடும் இவரது முன்முடிவு சரியானதே எனத் தோன்றுகிறது."கடல் நிலத்தின் வாசலைத்திறந்து புகுவதையும் கடலின் வாசல் திறக்கையில் நிலம் நிறைகிறதையும்" சொல்லி இப்படி முடிக்கிறார்...."அலை பாடிக் கொண்டிருக்கிறது கடல் பாடல்களை" என.

ஞாபகம் என்னும் கவிதையை தாபம்,காமம்,காத்திருத்தல்,என கலவியின் சகல உள் முகங்களுடனும் அணுகுகிறார்.அவனை நினைவுபடுத்திய கடல் என்னும் பிரதேசத்தை அச்சத்துடன் கவனிக்கும் சக்திஜோதியின் கவிமனம்...அந்த அனுபவத்தை உடனே உலகளாவிய பரவலுக்கு ஆட்படுத்துகிறார்...."கடல்/கரை/மணல்/காலடித்தடங்கள்/கூடவே உடைந்த சிப்பி/ எந்த அர்த்தங்களுமற்று தம் இருப்பிடங்களிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன".என்கிறார்.

கலாப்ரியா, ஆத்மாநாம், கல்யாண்ஜி, போன்ற பல்லாண்டு காலம் எழுத்தால் அறியப்பட்ட கவிஞர்களின் வரிசையில் சக்திஜோதியைக் கொண்டு பொருத்தலாம் என்பது மேற்சொன்ன கவிதை நமக்கு கொடுக்கக் கூடிய மென் உணர்வு இழைகளாலான அனுபவத்தில் அர்த்தமாகிறது.

பெண்ணின் காதலும் அளவற்ற கொடையாக நிகழும் கலவியும் ஒருவனை"திரும்பவும் நீ நீயாகிவிடாத நிலையடைவாய்"என்னும் "தேன்" என்னும் கவிதை வரிகள் இதற்கு மேல் அடியெடுத்து வைக்கவியலாத கையறு நிலையை காமம் உடல்களற்ற வெளியில் ஏற்படுத்தும் என்ற பொதுமையை உடத்தெறிகிறது..

வலுக்கும் சாரல் தன் மேல் படரும் ஆண் வாசம் என நிலம் வெட்கத்துடன் மலர்வதாக சொல்லும் ஜோதி.., நிலமெங்கும் பாய்ந்தோடும் மழை நீர் நின்றதும் நிலம் தன் உடலை மூடிக்கொண்டு உட்கொண்ட மழை என்னும் பேராண்மையைப் பருகுவதாக சொல்லி..பிறகு மழையே தானாகிறாள் என சொல்லும் பொழுதுசங்க இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடைத்த காதலின் மாயவித்தையை நம் கண்ணில் நிறுத்துகிறார் காட்சியாக்கி.

அலைந்து திரிகிற பறவை/ முத்தத்தை உதிர்க்கிறது/கனவெங்கும். நிலத்தை/அடையவியலாத முத்தம்/வெளியெங்கும்/உதிர்ந்து கிடக்கிறது/பின்னிரவின் நிலா
வெளிச்சமாய்.

அந்தரத்தில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒட்டிக்கொள்கின்றன, முத்தங்கள்.பின்னிரவின் நிலவொளியாய்.படிப்பவர் நெஞ்சில் கலவையான உணர்வுகளைக் கிளறிவிடக்கூடியதாகிறது.

கடலை அறிந்தவள் என்னும் இன்னொரு கவிதையில் "பேரிரைச்சலைத் தரும்/ அலைகள் கூட /பெருமௌனம் என்பதாகத்தான் /நம்பிக்கொண்டிருந்தேன் .மிக அமைதியான அதே சமயத்தில் மிக உறுதியான வரிகளல்லவா..?

கிளிபுராணம்..கவிதையில்.."கூடடையாத கிளிகள் பல்லாயிரம் ஆண்டுகளாய் பறந்து செல்கின்றன அகன்ற வானில"கிளிகள் சொல்வதை சொல்வதாகவும்,மீனாட்சியின் தோளிலும்,காமாட்சியின் கையிலும் பல நூறு வருடங்களாய் இருப்பதை பறைசாற்றுவதன் மூலமாக பெண்ணியத்தில் தனதான கருத்துக்களை எடுத்து வைக்கிறார் அமைதியாக.

"வீடு திரும்பி ஆடைகளை மாற்றிக் கொண்டிருக்கையில் மழையின் ருத்ரதாண்டவம் இன்னும் கூடியிருந்தது".தன் மகளோடு மகளாகி மழையில் நனைந்துதான் மகளாயும் அவள் தானாகியும் மாறி குதித்து மழையை நுகர்ந்து முடித்த பின் வீடு திரும்பி விட்ட பிறகும் கவிமனம் மழையை உற்று நோக்குகிறது.அந்த மழையைஅளவெடுக்கிறது.அதனை ருத்ர தாண்டவமாய் காணுகிறது.

"ஒரு துளி கண்ணீர் வழியாக கடந்து செல்கிறது அன்பு. "கடத்தல் என்னும் கவிதையில் "ஒரு போதும் உணர்ந்த அன்பை சொற்களில் வெளிப்ப்டுத்த முடிந்ததில்லை". என்கிற ஆதங்கம் தொனிக்கிறது.

.இந்த கடலோடு இசைத்தல் தொகுப்பில் இறுதியில் இடம்பெறக்கூடியது பெண்மை பற்றிய சில கவிதைகள், வண்ணமயமான உணர்வு களால்பெருக்கெடுக்கிறது.ஊதா நிறப்பயிர்கள்,நீலப்பூக்கள்,பசை நிற உலகம்,ஆரஞ்சு நிறக் காலைப்பொழுது வயலட் கனவுகள்,சிகப்பு தேவதை என நிறங்களின் தனித்த தன்மைகளின் வழியாக ஒரு கதானுபவத்தை நமக்குள் பதிய வைக்கிறது.

பொதுவாகவே சக்திஜோதி என்னும் இக்கவிஞர் பெரும்பாலும் உணார்வுகளின் நுண்ணிய தாக்குதல்களை எடுத்து வைக்கிறார். இவரது கவிதை உலகம் கண்டறிந்த அதிசயங்களை கருப்பொருளாக்க முனைவதே இல்லை எப்பொழுதும். அதீதமான சொல்லாடல்கள்,மொழியின் மாய இருள் நிறைந்த கவிதானுபவம் இவற்றுக்கெல்லாம் முயல்வதே இல்லை சக்திஜோதி... மாற்றாக மிகச் சாதாரணமான எல்லாருக்கும் அனேகமாக எளிதில் கைவரக்கூடிய சொற்களை எடுத்து கொண்டு, காலகாலமாய்க் கவிதைகளில் பலவாறும் கையாளப்பட்ட பொருள்/அனுபவம்/கற்பனை இவற்றையே தானும் தொடுகிறார். இது மிகச்சாதாரணம். ஆனால்...சக்தி ஜோதி, சாதாரணமான இயங்குவெளியை தேர்ந்தெடுத்து, அதை தனது பார்வையால் தனது அனுபவத்தால் அதீதமாக்கி விடுகிறார். இந்த அதீதமானது, அவரது மொழி மேதமையைக்காட்டப் பயன்படாமல், அடக்கி வாசிக்கிறது. செய்திகளாக நினைவில் தங்கிவிடுகிறது.

அவர் கடல்/நிலா/முத்தம்/கிளி/ என எதனை குறித்தாலும்...நமக்கு சக்திஜோதியுடைய கவிதைகளை படித்த பின் நம்முள் அவருடைய கடலும், நிலாவும், கிளியும் வந்து அமர்ந்து கொள்கின்றன. பிரத்யேகங்களான முத்தம், கலவி, காமம், ஊடல், தாபம் போன்றவற்றை பொது நிகழ்வுகளாக மாற்றிவிடும் சாதாரணங்களின் அசாதாரணக் கவிதைகள் சக்திஜோதியுடையது.

பெண் எனும் கவிதையில் இயற்கையை, நிலத்தை, காற்றை, ஒரு பெண்ணாக, அவைகள் போலத் தானும் குளிர்வதையும் வெப்பமுறுவதையும் அவற்றை சொல்ல உரிமை இல்லை எனவும் ஆதங்கப்பட்டும் கவிஞர்... பெற்றெடுக்கும் தாய்மைக்கு கொண்டாட உரிமை இல்லை எனச் சொல்லி பெண்ணியத்தின் சர்வநிச்சயக் குரலொன்றை முன்வைக்கிறார்.

"இந்த பஞ்ச பூதங்களாய் இருக்கிறேன்.எனக்கென சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லை"என முடித்தும் வைக்கிறார். சக்திஜோதியின் அக உலகம் இருள்களற்றது. எல்லா மாடங்களிலும் விளக்கேற்றிவைக்கிறார், தனது கவிதைகளால்.

................................................................................................................................................................................................................................................
காதலும் அதையொற்றி நுழையக்கூடிய ஊடலும் பன்னெடுங்காலமாக கவிப்பொதுப்பொருள்களாயின. காதல் என்பதைக் கையாள்வதில் உள்ள எளிமை கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கமாயி ருந்திருக்கக் கூடும்.ஆனால்,சக்திஜோதி காதலைஒரு சூத்திரமாக்குகிறார்.காதல் நிகழ்த்தக்கூடிய அகமாற்றங்களை அவர் உன்னிப்பாக கவனிக்கிக்கிறார்.காதலை உணர்ந்த பொழுது,காதல் நம்மை விழுங்கி தனக்கான இணக்கமாக மாற்றிவைக்கக் கூடிய இடர் எப்பொழுதும் உண்டு.ஆனால் காதல் என்ற ஒன்றை உட்கொள்ளும்அதே நேரத்தில் தன்னிலிருந்து தான் விலகி நின்று தன்னை நோக்கும் சக்தி ஜோதி,மிக அழகாக வித்யாசப் படுத்தி விடுகிறார்,தனது கவிதைகள் இயங்கும் மனங்களை.இது கைவரப்பெற்றதாலேயே,நிசப்தமாக காதலை அணுக முடிகிற ஜோதிக்கு,அதிர்வுகளற்று ஊடலையும் கையாள முடிகிறது.

எனக்கான ஆகாயம் என்னும் தனது சமீபத்திய தொகுப்பில் முன்னிரு தொகுப்புக்களை விடவும் இன்னும் பலமிகுந்த பிரயோகங்களால் நம்மை சந்திக்கிறார்.

காற்றில் மிதக்கும் துயரம் எனும் கவிதையில்"அன்பைப் பெற காத்திருக்கையில்/மௌனத்தின் ஊடே/ கடந்து செல்கின்ற காற்றில் /மிதந்து கொண்டிருக்கிற காதல் /துயரமாக /கண்களில் வழிகிறது.என காத்திருத்தல் என்னும் கையறு நிலையை மிக அழகாக முன்வைக்கிறார்.

இரண்டு நிலா தெரியும் இரவுகளில்,கலவியின் நிறைவு தரக் கூடிய தனித்து விழித்தலின் அனுபவத்தை அந்த திறந்த விழிகளால் காட்சிப்படுத்துகிறார் ஜோதி. "நதியில் நீந்தும் மீன்களைப் போல/ நினைவுகளில் பயணிக்கிறது /ஒரு சொல்............
......................நீரின் ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன்/கூடவே நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்."என்கிறார்

தருணம் என்னும் கவிதையில்.உடனுக்குடன் கூடு விட்டுக் கூடு பாய்வதைப் போல,எந்த ஒரு நேரடி அனுபவத்தையும் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே பன்முகம் கொண்டதாக விரித்து வைக்கும் ரசவாதியாய் தெரிகிறார் ஜோதி.

சமையலறை உலகிலிருந்து என்னும் கவிதையில் எல்லா விதத்திலும் ஒரு பெண் எங்கனம் தனது வீட்டிற்குள் இன்றைக்கும் சிறை வைக்கப்பட்டிருக்கிறாள்.என்பதை எடுத்து வைக்கும் சக்தி ஜோதி .தொலைபேசி/அலைபேசி/கேபிள்காரன்/விற்பனைப் ப்ரதிநிதி என அவளை சந்திக்கிறவர்களின் வாயிலாக இந்த கவிதை நிகழும் காலம் தற்காலம் என்பதை அழகுறப் பதிவு செய்தும் விடுகிறார்.

கணவனுக்குப் பிடித்த உணவை சமைக்கத் தொடங்கும் நவீன வசதிகளின் உடனிருப்பில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்ணை எடுத்துக்காட்டும் விதம் சப்தமின்றி வலிக்கும் சூட்சுமத்தை கையாள்கிறது.

நிலாக்காலம் எனும் கவிதையில் நிலா வைக்காண இரண்டு வாரங்கள் கொந்தளிப்புடன் காத்திருந்ததாய் தொடங்கும் சக்தி ஜோதி நிலவு உறங்கப் பொன பிறகும் அதை பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லும் பொழுது,பொது நிகழ்வைத் தனித்ததாக்கி கவிதைப்படுத்துகிறார்.
சதுரங்கத்தை சொல்வதாக இரண்டு ராஜாக்கள் சுகித்திருக்க இரண்டு ராணிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்" என்னும் கடைசி வரியில் அபிப்ராயங்கள் தேவையற்ற பெண்மொழியை முன்னெடுக்கிறார்.

வனத்தின் குரல் என்னும் ஒன்றில்"வனமெங்கும் அதன் வாசனை உன் அருகாமையை நினைவூட்டுகிறது" எனத் தனதான தனிமைக்குள் அவனை எளிதாய்வரவேற்று விடும் அவள் "மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள் நம்மை ஏளனம்செய்வது வனமெங்கும் ஒலிக்கிறது" என சொல்கையில அந்நிகழ்வு இருவரிடைப் பொது வாகிறது,அதனைப் பூர்த்தி செய்கையில்.

எனக்கான ஆகாயம் என்னும் கவிதையில் மழைக்காலத்தில் மழை தவறாமல் வந்து விடுவதை சொல்லும் சக்திஜோதி....நிலவற்ற வானம்/எனக்கு மேலே விரிந்திருந்தது...............................இந்த மழைக்கால//வானம்/வசந்தத்தை தரையில் இறக்கியபடி இருக்க/கிளையில் அமர்ந்திருக்கிறது/ஒரு பறவையென/என் காதல்....................../நான் மிதந்து கடக்கிறேன்/எனக்கான வானத்தை.என மழையின் மேகங்களை அப்புறப்படுத்தி விட்டு தனக்கான ஆகாயத்தை மிதந்து கடக்கும் காதல்பறவையின் சிறகுகளைப் படபடக்க வைக்கிறார்.

முற்றத்தில் /வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கும் /அவள்/அவனுக்கான /வார்த்தைகளை /நதியில் மறைத்து வைக்கிறாள்./அதை விழுங்கிய மீன்களின் /வயிற்றில் /கல்லாய் உறைந்து கிடக்கின்றன.என்னும் கல்மீன் என்னும் கவிதை சக்திஜோதியின் ஆகச்சிறந்த கவிதைகளில் ஒன்று எனச் சொல்லலாம்.இதன் மொழிச்செழுமையும் நம்மை இந்த வரிகள் கொண்டு சென்று நிறுத்த கூடிய வெளியும் பரவசஉணர்வைத் தருகின்றன.

எதையும் கவிதையாக மாற்றிப் போடக்கூடிய வல்லமை சக்திஜோதியை பிறரிடமிருந்து அன்னியப்படுத்திக் காட்டுகிறது.மொழிவன்மையும்,இயங்கிக் கொண்டே இருக்கக் கூடிய அவஸ்த்தையுமே சக்திஜோதியின் கவிதைகளில் அழகியல் எந்த மிகையுமின்றித் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொள்வதை காண முடிகிறது. இதற்கு முன் என்னும் கவிதையில் /உண்மையில் உனது பிரிவும் சந்திப்பும் என்னுள் நிகழ்ந்திருக்கிறதா/என்னும் வரிகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி காற்றற்ற குளமொன்றின் ஒரே பழய அலையின் வட்டங்களை தக்கவைத்து
நிகழ்த்தக்கூடியதாய் இருக்கிறது.

"நீர்ப்பறவைகளின் பாதம் பட்டு கலைந்த பாசி மீண்டும் மூடிக் கொண்டது/குளத்தின் ஆழம் ஒரு போதும் தீர்ந்துவிடாத தாகத்தை தருகின்றது/"என்னும் குளத்து நீர் என்கிற கவிதையில் ப்ரம்மாண்டமாய் விரிகிறது கவிவெளி.

நிலவாகும் பறவை என்பதில்"பறவைகளற்ற கூண்டினைத் திறந்ததும் வெளியேறும் நிலவை பின்தொடர்கிறார் வழிதவறிய பறவையைப் போல.

மணல் இல்லாத ஆறு என்னும் கவிதையில்

"ஓலமிட்டு வருகிறது மஞ்சள் நில லாரிகள்.....வேம்புகள் இன்னும் சிறிது நேரத்தில் விழப் போகின்றன.லாரிகள் சுமக்கும் மணல்களில் சிறு நத்தைகள் சுருண்டு மடிகின்றன."

பேரதிர்ச்சியை நமக்குள் வாரிவழங்கியபடி நமக்குள் மண் அள்ளும் லாரிகள் ஓட்டமெடுப்பது தான் இந்த கவிதையின் அலாதி.சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்றுஆறுகள் மணலுக்காக மழிக்கப்படுவது.ஆனால்,இதை எதிர்காலச் சந்ததியின் ஏதோ ஒருவன் படிக்கும் பொழுது மணல் என்பது அருங்காட்சியகங்களில் எளிதில் காணக்கிடைக்கலாம் என்னும் அபத்தம் நம்மை புரட்டி அடிக்கிறது.

என் சிறுவயது நெற்றியினை அலங்கரித்தது வேங்கை மரப்பொட்டு/
என் குமரிப்பருவத்தை அழகுபடுத்தியது/என் மகளுக்குப் பொட்டிட மரம் தேடுகிறேன். வேங்கை இருந்த நிலம் என்னும் கவிதையின் இடைவரிகள் இவை.

கவிதைகளுக்குள் ஒரு மாபெரிய நாவலை அலட்சியமாகக் கடந்து செல்வது இங்கு இயல்பாய் நிகழ்கிறது. சக்திஜோதியின் தரிசனம் வியக்க வைப்பதாயிருக்கிறது.அடைப்புக்குள் அடங்கக் கூடிய முடிவான கவிதைகள் இவருடையது.பொதுவாக முடிவுற்ற கவிதைகளை படிக்கையில் சாதியமாவது,அது தரும் நேரடி அனுபவம் மட்டுமே.வாசிப்பவனது மனதில் பலகாலம் அது இயங்கிக்கொண்டிருப்பதில்லை.நேரடி அனுபவங்கள் மனதில் அறைபவை மட்டுமே எப்பொழுதும் நீடிக்கும்.ஆனால்..சக்திஜோதி இந்த மரபை உடைக்கிறார்.முடிவுற்ற கவிதைகளை அவர் தன் வசப்படுத்திக்கொண்டு,தான் எழுதியவற்றை முன்வைக்கிறார்.

அனாயாசமாக .பெண்ணியம்,காதல்,இயற்கை,பழமையைப் போற்றுதல், காலம் மனிதனை விழுங்குதல்,சொந்தத் தனிமை, ஊடல்,கானகம், மனசுக்குள் இயங்கக் கூடிய மௌனம்,மாற்றங்களின் அபத்தம்,பிற உயிரினங்களின் மீதான கரிசனம்,சொல்லிலடங்காப் பேரன்பு,
காமம்,கலவி,சார்ந்திருத்தல்,தனித்தியங்குதல்,இன்னும் இன்னும்.....

அவிழ்க்கப்பட்ட பெண் மனம் ஒன்றை மிக அருகாமையில் சந்திக்க முடிகிறது சக்திஜோதி யின் கவிதைகளில். உள்ளுணர்வையும், மொழியறிவையும் கலந்து பிசைந்தால்,கவிதை நெய்யலாம் என்ற கூற்றுக்கான உச்ச பட்ச சாத்தியம் எளிதில் தொட முடியாதது.அதன் ஆரம்பச்சுவர்களைத் தகர்த்தெறிகின்றன.... சக்திஜோதியின் கவிதைகள்.

தென்மேற்கு பருவக்காற்று... சாமானியர்களின் அதிசயம்.

தென்மேற்கு பருவக்காற்று படம் வெளிவந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. தமிழில் ஒரு வெற்றிப்படம் என்றால் ஒன்று நாயகன் பன்ச் வசனங்களை பேச வேண்டும் அல்லது நாயகி உடைகழற்றுதலில் தாராளம் காட்டியிருக்க வேண்டும். நாயகனுடன் வரும் 40 வயதினை தாண்டிய நண்பர்கள் நாலு பேராவது இருக்க வேண்டும். கண்ணை கூச வைக்கும் பாடல் காட்சிகள் கட்டாயம் வேண்டும். அபத்தமான சண்டைகள் கண்டிப்பாக வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக ஒரு ரத்த வெள்ளக்கதை வேண்டும்.

பாரதி பராசக்தியிடம் வேண்டிக் கேட்ட ஒரு காணி நிலத்தை உழுது, தன் ஓரே மகனுக்காக வாழ்ந்து, ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும். மகனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து விட வேண்டும் என்று தனக்கான உலகத்தை தன் மகனுக்காகவே அமைத்து அதனுள் வாழ்ந்து, அவனுக்காகவே உயிரையும் விட்டு, அவன் வாழ்விடத்தின் உள்ளும் புறமும் தனது மூச்சை விதையாக, வேலியாக, காற்றாக மாறிக் கலையும் தாய்மையின் ஒற்றை பிம்பத்தை சுற்றிய கதையே சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக் காற்று.

இந்த விமர்சனமே இணையத்தில் தான் எழுதப்படுகிறது. அறிவியலின் எல்லா கண்டுபிடிப்புகளுமே எதாவது ஒரு பழமையின் தொடர்ச்சியை இடம்பெயர்த்து தூர எறிவதாகவே அமையும் என்பது வாழ்வின் அபத்தமான விதி. இன்றைக்கு ஒரு கதை சொல்லியாக தேர்ந்து எடுப்பதற்கு எத்தனையோ களங்களும்,அதன் பரிணாம நீட்சியும் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஆனால் தாய்மை....? அதற்கு மாற்றான ஒரு அமைப்பை இயற்கையும் நமக்கு தரப் போவது இல்லை. செயற்கையிலும் அதற்கு விடை இல்லை.

எப்பொழுதாவது பெய்யும் மழை தான் நமது மனசுக்குள் ஒரு காரணத்தை பற்றிக்கொண்டு வெகுகாலத்துக்கு நினைவடுக்குகளில் நீடித்து இருக்கும். அது போன்றதொரு அன்புப் பெருவெள்ளம் தான், இத் திரைப்படத்தில் ஒரு தேனி மாவட்டத்து தாயாக நமது மனசுக்குள் ஆணி அடித்த சித்திரமாய் அமர்ந்து கொள்கிறார் சரண்யா. அவரது ஆரம்ப படங்களான நாயகன், மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது தொடங்கி இன்று வரை கூடிக் கொண்டே போகும் அவரது நடிப்பின் மிளிர்வு இந்தத் திரைப்படத்தில் பன்மடங்கு விரிவடைகிறது.

சரண்யா, தன் மகன் விஜய்சேதுபதி(அறிமுகம்)க்காகவே வாழும் அன்னை. வயலில் வேலை பார்த்து ஒரு வீட்டை கட்டி விட வேண்டும், தன் மகனுக்கு ஒரு கல்யாணம் செய்து விடவேண்டும். இவை தான் சரண்யாவின் லட்சியங்கள். இரவுக்காவல் இருக்கும் சேதுபதி, கிடையில் ஆடுகளை களவு செய்ய வரும் திருடர்குழுவை துரத்திக்கொண்டு ஓட, ஒரு திருடன் அகப்படும்பொழுது, அந்த திருடனின் முகமூடி துணியை விலக்கிப் பார்த்தால்..... அகப்பட்டது திருடி.(வசுந்தரா சியேட்ரா).

அவளை போகவிடுவது சேதுவின் பெருந்தன்மை அல்ல. அது அந்த நேரம் அவனுக்குள் வந்து புகுந்து விட்ட காதல்.. அவள் மீண்டு சென்று விட, ஒரு புறம் ஆடு திருடர்களை தேடும் போலீஸ். உடன் செல்லும் சேது, வசுந்தராவைப் பார்த்து விடுகிறான்.

சேதுவுக்கு தனது உறவிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து (அறிமுகம்) ஹேமலதா நிச்சயம் செய்கிறார் சரண்யா. ஆனால் சேது வசுந்தராவை காதலிப்பதால் திருமணம் நிற்கிறது. ஆடுகளவாணி அருள்தாஸ்(&)குடும்பத்தினர், காவல்துறையிடம் மாட்டாமல் இருப்பதற்காக சேதுவை மிரட்ட அல்லது கொன்றுவிட முடிவெடுக்கிறது. விளை நிலத்தில் ஏற்படும் சண்டை சேதுவும் தாஸும் கட்டி புரள்கின்றனர். கைது செய்யப்படும் தாஸ் மற்றும் அவரது குடும்ப ஆண்கள் ஒரு புறம் சிறைக்கு செல்ல, இதற்குக் காரணமாய் தான் அமைந்து விட்டதற்காக வருந்துகிறான் சேது. இடைவேளையாகிறது.

இரண்டாவது பாதியில் சிறையிலிருந்து வெளிவந்த தாஸ் சேதுவை குத்த வந்த நேரத்தில் குத்து வாங்கி சரியும் சரண்யா, தனது மகனுக்கும் வசுந்தராவுக்கும் திருமணத்தை செய்து வைத்து விட்டு உயிரையும் விட வேறு ஒரு பகையாளியால் தாஸ் கொல்லப்படுகிறான்.

முதல் பாதியில் வசுந்தராவுக்கும் சேதுவுக்குமான காதல் இந்த காலகட்டத்தில் ஒரு ரம்யமான, நாசூக்கான காதல்.. அதை விட ஹேமலதாவின் மண்வாசனை அழகும், அவர் போட்டோவை திருப்பித் தரும் காட்சியும் கவிதையைப் படமாக்கியது போன்ற உணர்வை தருகின்றன.. வஸுந்தரா சியேட்ரா கண்களால் கவி பாடுகிறார். காதலை சொல்வதற்கேற்ற அழகுக் கண்கள்.

நண்பனாக வரும் தீப்பெட்டி கணேசன் ஒரே மாதிரி பேசுவதையும், ஒரே படத்தின் பாத்திரம் போலவே நடிப்பதையும் குறைத்துக் கொண்டால் நல்ல ஒரு இடத்தை அடையலாம்.

படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் நடிகர்கள் என்ற உணர்வே இல்லாமல், ஏதோ மறைத்து வைத்த கேமராவைக் கொண்டு ஒரு வட்டார வாழ்வைப் படம் பிடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது செழியனின் கேமிரா. அறிமுக இசை அமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன் இசை வைரமுத்துவின் அரசாட்சி நடைபெற ஒரு நல்ல களத்தை ஏற்ப்படுத்தித் தந்து உள்ளது. "ஏடி கள்ளச்சி..... கள்ளிக்காட்டில் பொறந்த தாயே" இரண்டும் வெகு காலத்துக்கு நீடிக்கக்கூடிய தரத்தில் இருக்கிறது.

பெரிய பின்புலம் எதுவும் இந்த படத்துக்கு இல்லை. புதிய நடிகர் நடிகையர். புதிய நிறுவனம். இயக்குனர் சீனு ராமசாமிக்கும் இது தான் இரண்டாவது படம். ஆனால் ஒரு தாயை நாயகியாக்கி கதை சொல்லி வென்று இருக்கும் சீனு ராமசாமி, இன்னும் பல யதார்த்த நினைவோவியங்களை திரைப்படுத்துவார் என நம்பலாம்.

மசாலா நெடி இல்லை. மனிதர்களால் செய்ய முடியாத அபத்தங்கள், வீட்டுக்குள் வந்து விடக்கூடாத சைத்தான்களான ஆபாசம், கூச்சல், ரகளை, ரத்தவெறி, சண்டை க்ராஃபிக்ஸ், செட்டிங்க்ஸ் எதுவும் எதுவும் இல்லை. எல்லாம் உண்மை தான்...

ஆனால் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தாய்மையைப் போற்றுகிறது.... தென் மேற்கு பருவக்காற்று. கொண்டாட வேண்டியதும், கொண்டாடப் பட வேண்டியதும் வேறு என்ன இருக்கிறது..?

கொண்டாடுவோம். தென்மேற்கு பருவக்காற்றை. தாய்மையின் பேரன்பை.

செவ்வாய், 25 ஜனவரி, 2011

டுபாக்கூர் ராஜாவும் .டயமண்ட் ராணியும்

சென்னையில் போன வருடம் பெய்த அடை மழையின் ஞாபகங்கள் மற்றவர்களிடமிருந்து
எனக்கு முற்றிலுமாக வேறுபட்டது.அது வரைக்கும் எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது.ஏற்கனவே இருந்த அறையை காலி செய்து விட்டு வடபழனி கோயில் பக்கத்தில் ஒரு ஸ்டோரி வீட்டில் இருந்த முத்தண்ணன் உடன் நான் போய் சேர்ந்திருந்தேன்.முத்தண்ணன் என் வருகையினை ரொம்பவும் விரும்பவே செய்தார் என்பது அவர் என் மீது காட்டிய பாசமான அணுகுமுறையிலேயே தெரிந்தது.மதுரையில் முதலில் பரிச்சயமான பொழுது அவர் காட்டிய அதே அக்கறை,அதே நேசம்.இன்னும் அதுகளில் எதுவும் குறையவில்லை என்பதே பெரும் ஆறுதலாய்இருந்தது.ஒரு உதவி இயக்குனர் ஆக முயற்சித்துக் கொண்டு நான் சென்னை நகரத்து தெருக்களில்
அலைந்து கொண்டு இருந்த கடினமான நேரத்தில் உணவு,உடை என்பதை விட ஒரு நண்பனுடனான உறைவிடம் பெரிய நிம்மதி.
தினமும் காலைல என்னை எழுப்புவதில் இருந்து துவங்கும் முத்து அண்ணனின் உதவிகள்.நான் உற்சாகமிழக்கும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைதூக்கி நிறுத்தி நம்பிக்கை ஊட்டிமனநிலையை மாற்றுவதை அண்ணன் லாவகமாகவே செய்யும்.சில சமயங்களில் முத்தண்ணன் சொல்லும் சமாதானங்கள் வேறு யாரும் எனக்கு தராதவை.
முத்தண்ணனின் சிற்றன்னை மகன் பாலாவும்சனி ஞாயிறுகளானால்
எங்களது அறைக்கு வந்து விடுவது வழக்கம்.,அந்த மாதிரி சமயங்களில் தீர்த்தவாரி நடப்பதும் சகஜம்.ஓரிரு முறை விடிய விடிய குடித்து விட்டு தூங்காமல் அதிகாலை கிளம்பி பாண்டிச்சேரி போய் வந்ததும் நிகழ்ந்தது.
அன்றைக்கு சனிக்கிழமை இரவு.சீட்டுக்கச்சேரி ஓடிக்கொண்டிருக்க நான்
லேசாய் தலை வலித்ததால் கட்டிலில் படுத்துக்கிடந்தேன்.முரளி,ஜேம்ஸ்,பாலா,முத்தண்ணன்,
பக்கத்து ரூமில் வசிக்கும் நாகராஜ் 5 பேரும் சீட்டுக்களை விசிறி போல் கைகளில் தாங்கிப்
பிடித்திருக்க கதவை யாரோ தட்டினார்கள்.
நான் கதவை திறந்தேன்.எதிரே நின்றது கனகு.
"என்ன மாப்ள...நல்லாயிருக்கியா..?"
கேட்ட படியே தனது கையில் இருந்த பெரிய பையை நாசூக்காக உள் அறையில் போய்
வைத்தான்.பையினை திறந்து அதனுள்ளிருந்து ஒரு லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு
நேராக வெளி ரூமுக்கு வந்தான்.
"என்ன முத்தண்ணா..சவுக்கியமா..?ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்கள்ல..?ஒரு
வேலை கிடைக்கிறா மாதிரி இருக்கு சென்னை'ல.அதான் கெளம்பி வந்துட்டேன்."
அவன் எப்போதும் இப்படித்தான்.அடுத்தவருக்கு சந்தர்ப்பமே தராமல் பேசுபவன்.
நான் முறைத்தபடி கேட்டேன்.
"சொல்லாம கொள்ளாம இப்படி வந்து நிக்கிறதாடா..?ஒரு ஃபோன் செஞ்சிருக்கலாம்ல..?"
அவன் சிரித்தான்."நான் கால் பண்ணி சொல்லலாம்னு தான் உன் நம்பர் கேட்டேண்டா மாப்ள..உன் தங்கச்சி செல்வி உன் நம்பர் தெரியாது'ன்னு சொல்லிடிச்சி.."
கனகுவிடம் இருந்து செல்வி என்னை காப்பாற்றி இருக்கிறாள்
"அப்புறம் எப்டிடா ரூம் எல்லாம் கரக்டா கண்டு பிடிச்சு வந்தே..?"
அவன் அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.
"முத்தண்ணன் கிட்டே கெட்டேன் மாப்ள"
நான் அண்ணனை முறைத்தேன்.அவன் தூங்க துவங்க முத்தண்ணன் பரிதாபமாக
முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார் "சென்னைக்கு வர்றேன்'ன்னாண்டா தம்பி..உன்னை பாக்க வரணும்'னு சொன்னதால அட்ரஸ் குடுத்தேன் டா நான்"
"பாத்தீங்கள்ல...?இவனை முதல் வேலையா துரத்தணும் அண்ணே."
என்றேன்.என்னால் இதை ஒத்துக் கொள்ளவே முடியாது.கனகு என்ற ஒருவன் பல
முறை எனது பழய ஞாபகங்களின் வெறுப்பு அடுக்குகளில் இருந்து எட்டி பார்த்து
என்னை கேலி செய்வது போலவே தோன்றியது.
விடுரா...?பாவம்.அவன் என்ன பண்ணான்...?"என்றார் அண்ணன்.
மறுநாளில் இருந்து நிம்மதி இழந்தேன் நான் என்று
சொல்லாம்.மழை மழை பேய் மழை.(அப்படி சொல்ல கூடாது டா தம்பி.பேரன்புக்கு பேர்
பேய் மழையா...?தாய் மழை ன்னு சொல்லு...எவ்ளோ அழகா இருக்கு")அது சரி..மழையை
எப்படி குறை சொல்வது...?கனகு வந்த நேரம் என்னால் எதையும் ரசிக்க முடியவில்லை.
அறையிலேயே முடங்கி கிடந்தோம்.
இன்னிக்கு நான் சமைக்கிறேன் ன்னு சொல்லி சமையலை
ஆரம்பிச்சான்.எனக்கு ஒண்ணும் பெரிசா பிடிக்கலை.முத்தண்ணனும் பாலாவும் கனகு
செஞ்ச சிக்கன் குழம்பயும் கோலா உருண்டையயும் ரொம்ப ரசிச்சாங்க.பாராட்டி
தள்ளீட்டாங்கன்னு தான் சொல்லணும்.எனக்கு ரொம்ப ஒண்ணும் பிடிக்கலை.
மறு நாளில் இருந்து ஆரம்பிச்சது அவன் அட்டகாசம்.முத்தண்ணனை
கைக்குள்ள போட்டுக்கிற வழியை மெல்ல கண்டு பிடிச்சான் கனகு.காலைல சீக்கிரம்
எழுந்து ரூமை கூட்டுறானாம்.நீட்டா வெச்சுக்கிறானாம்.குடி தண்ணீ வாங்கி வெக்கிறானாம்.
சமைக்கிறானாம் எல்லாத்துக்கும் மேலா....சரியான ஏமாத்துக்காரன்.பொம்பள செய்யுற
வேலைய எல்லாம் ஒருத்தன் ஆம்பள எதுக்காக பாக்கணும்..?இல்லை எதுக்காக
பாக்கணும்'னேன்..?
இந்த முத்தண்ணனும் இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும்"தம்பி...கனகு தம்பி
கனகு"ங்கிறாரு..எனக்கு பத்திக்கிட்டு வருது.போன மாசம் ஒரு நாள் எனக்கு நல்லா
ஞாபகத்தில இருக்கு.சனிக்கிழமை நைட்டு.சீட்டு கட்டை எடுத்து கலைச்சு ரெண்டு
கைலயும் பிடிச்சு விர்ருன்னு ஒண்ணு சேக்குறேன்.வழக்கமா நான் இப்படி பண்ணதுமே
முத்தண்ணன் என் தலையை கலைக்கும் செல்லமா..என்னை பாராட்டுறா மாதிரி.
அன்னிக்கு வழக்கத்துக்கு மாறா,"தம்பி கனகு'ங்கிறாரு
அவனும் என் கைல இருந்த சீட்டு கட்டை தான் வாங்கி என்னென்னமோ வித்தை எல்லாம்
செய்யுறான்.சும்மா சொல்ல கூடாது.நல்லா தான் செஞ்சான் வலது கைய்யை ஆட்டி"டுபாகூர்
ராஜா"ங்குறான்...தொறந்தா இஸ்பேடு ராஜா....இடது கைய்ய மூடி இப்ப பாரு டயமண்டு
ராணி"ன்றான்.தொறந்தா அதே ராணி".....
. அதுக்கு அடுத்து முத்தண்ணன்செஞ்சது தான் எனக்கு எரிச்சலாயிடுச்சு.என்னை செய்யுறா
மாதிரியே அவன் தலையை செல்லமா இல்லைன்னாலும் அதே மாதிரி கலைக்கிறாரு
நண்பா....எனக்கு எப்படி இருக்கும்...?

ராசாங்கங்களெல்லாம் ஒரே ஆட்டத்துல தோல்வியுற்ற பாண்டவர்
ப்ரதர்ஸ் நிப்பாங்களே அது போல நின்றேன்.முத்தண்ணன் கண்டுக்கவே இல்லை.அவருக்கு
இது ஒன்னும் வித்யாசமா தெரியாம இருந்து இருக்கலாம்.ஆனால் எனக்கு தெரியும் அந்த
வலியும் வேதனையும்.

அப்புறம் நிறைய நடந்துச்சி வரிசையா.என்னை விட்டுட்டு ஒரு வாரம்
சனிக்கிழமை ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போனது,முத்தண்ணன் ஆபீஸ்'லயே கனகும்
வேலைக்கு சேர்ந்தது.பாலா உள்பட எங்கள் அறைக்கு வரும் வழக்கமான
நண்பர்கள் கூட கனகுவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது.

ஒரு நாள் ஜாடையாக கேட்டேன் அண்ணனிடம்.
"என்னண்ணே,கனகு ரூம் எப்போ மாற்றதா சொன்னான்..?"
அவன் மாறணுமான்னு கேட்டாண்டா தம்பி..நான் தான் அவண்ட்ட
சொன்னேன்..உன்னால ஒரு பிரச்சினையும் இல்லை.உதவி தான்.நீ எங்கயும் போக
வேண்டாம்'ன்னு சொன்னேன்."
கடைசீ வாய்ப்பும் போனது தெரிந்தும் அமைதியாய் இருந்தேன்.
எப்படி இந்த முத்தண்ணனுக்கு புரிய வைப்பேன்...?கனகு நல்லவன்.அனுசரணையானவன்.
என்னை விட நல்லவன்.என்னை விட திறமையானவனும் தான்.நன்றாக பழகுவான்.எல்லாம்
சரி தான்.எனக்கு பொறாமையாக இருப்பதையும்,என்னால் அவனை பொறுத்துக்கொள்ள
முடியவே இல்லை.இன்று நேற்றல்ல....பள்ளி காலம் தொட்டே நான் அவனை வெறுத்தும்
அவன் என்னை விரும்பியுமே இதுகாறும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்று.
அடுத்த ரெண்டாவது நாளே என் ப்ரச்சினைக்கு ஒரு
தீர்வு கெடைச்சது.முத்தண்ணனிடம் சொன்னேன்"அண்ணே எங்க டைரக்டர் சார்
புது ஆபீஸ் லயே ஒரு போர்ஷன் ல என்னையும் இன்னொரு உதவி இயக்குனரையும்
தங்க சொல்லிட்டாரு...நாளைக்கு கிளம்புறேன் நான்"
அண்ணனுக்கும் கனகுக்கும் ரொம்ப சங்கடம்.
திருச்சி ல இருந்து எங்க டைரெக்டர் கிட்ட உதவி இயக்குனரா ஒரு சின்ன பையன்
சங்கர்'ன்னு சேந்து இருக்கான்.தற்சமயத்துக்கு அவனோட ரூம் ல தான் இருக்கேன்.
முத்தண்ணன் கிட்டே சொன்னா மாதிரி ஆபீஸ்ல எல்லாம் ஒன்னும் தங்கலை நான்.
இந்த ரூம் தாம்பரத்துல இருக்கு.சின்ன ரூம்.ஒரு கட்டில் தான்.காமன் டாய்லெட்
வேறு.இப்படி சின்ன சின்ன ப்ரசினைகள் இருக்கு தான்....
இருந்தாலும்...இருந்தாலும்.....நீங்களே சொல்லுங்க நண்பா.....
மனசுக்குள்ள பொறாமையோட ?வெந்து சாகுறத விட...இது எவ்வளவோ மேல்."
என்ன சொல்றீங்க..?


nanri...keetru

கடவுள் பற்றிய 3 கவிதைகள்

1.கதவு பூட்டப்பட்ட
கோயிலின்
இருள் ப்ரகாரங்களில்

ஒன்றை ஒன்று தொட்டுப்பிடித்து
விளையாடுகின்றன
உப கடவுள்கள்.

உள்ளே தனிச்சிறையில்
வீற்றிருக்கும்
மூலவரின் ஏக்கத்தனிமையினை
ஒன்றும் செய்யவியலாது.
*********
2.நாமிருவரும்
நம் நம் கடவுளரின்
பெயரால் உறுதியெடுத்துக் கொண்டோம்.

என் கடவுளை உனக்கு
அறிமுகம் செய்விப்பதாய் நான்
நிச்சயித்தேன்.
நீயும் உன் தெய்வத்தை
எனக்கு பரிச்சயப் படுத்துவதாய்
சத்தியம் செய்தாய்.

இடவல மாற்றத்தின்
ஏதோவொரு விதியொன்றின்
அபத்தத்தில் முடிவுக்கு வந்தது நம் ஸ்னேகம்.

சந்திக்காமலே போயின நம்மிருவரின்
பழைய கடவுள்கள்.
நம்மை மீண்டும்
சந்திக்க செய்ய்யுமா..,
வேறு புதிய கடவுள்கள்...?
********************
3.இன்று ".........."கடவுளின் பிறந்த நாள்.

சிறப்பு தரிசனத்துக்கு
பணம் குடுத்து பாருங்க.
.
பதவில எதும் இருக்கிங்களா..?
அப்ப சும்மாவே பக்கத்துல வந்து பாருங்க.

பணமும் இல்ல..பதவீலயும் இல்லையா...?
அப்படின்னா க்யூ வுல வாங்க...
இல்லைன்னா வெளில போங்க.

ஹேப்பி பர்த் டே டூ யூ.
ஹேப்பி பர்த் டே டூ யூ.

நினைச்சதெல்லாம் நடக்கும்.
சக்தி வாய்ந்த தெய்வம்.

நிசப்தங்களின் காகிதப்பிரதிகள்

இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
உன் ஆரம்ப வருகைகள்
எனக்களித்த பரவசங்களை.

பாலைவனத்தில் முன்னிழுக்கும்
காலடித் தடங்களாய்
மெல்ல ஊடுறுவின சம்பவங்கள்.

இறுக்கமாகிப் போன
ஸ்னேகிதத்துக்காக நாம்
ஒருவருக்கொருவர் நன்றி பகின்றோம்.

கால காலத்துக்கும்
நீடிக்கப் போகும்
சாஸ்வதங்களில் ஒன்றாக
அடையாளப்படுத்தப்பட்டோம்.

காற்றுக்குமிழி ஒன்றை தாங்கவியலாத
ஊழித்தீயாய்
முடிந்தேறியது சகலமும்.

அமானுஷ்யமாய்
எனது அறையின் தற்போதைய
நிசப்தங்களின் காகிதப்பிரதிகள்
தொலைந்து போயின.

நீ வேறெங்கேனும் துவங்கியிருக்க கூடும்
உனது ஆரம்ப வருகைகளின்
பரவசங்களை.

nanRi...keetru

பிரிதல் 10.

................................................
1, பிறரிடம்
பேசியிருக்க வேண்டாம்.
என்னிடம் சொல்லாதவற்றை.
.................................................................................................................................
2. எப்போதும் நீ வரும்
வழக்கமான வீதியையும்
மாற்றியிருக்கிறாய்.
………………………………………………………………………………………..
3 .அறை மூலையில்
நீ கொடுத்த பொம்மை.
அறை முழுக்க நீ..
.......................................................................................................................................
4. எனக்கும் சொல்லிக்கொடு.
என்ன செய்தாய்..?
என்னை..?
…………………………………………………………………………………..
5. வெளித் தள்ளிக் கதவடைப்பதை
விடவும்
உள்ளே நுழையுமுன்
தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
...............................................................................................................................
6, உனக்கு பதிலாய்
காற்று எழுப்புகிறது.
என் காலைகளை.
................................................................................................................................
7, திறந்து தானிருக்கிறது,கதவு.
நீ தட்டும் ஒசையும்
கேட்கிறது.
………………………………………………………………………………………
8.முதல் மழைக்கும்
கடைசி மழைக்கும்
இடைப்பட்டது வாழ்க்கை.
......................................................................................................................................
9. தூரத்துப் புள்ளி ரயில்
நொடிகளில் கடந்து போகும்.
அடுத்தமுறையும்.
...............................................................................................................................
10.என்னிடம் தான்
வந்து கொண்டு இருக்கிறாய்.
எனைத் தாண்டிச் சென்ற பின்னரும்.
...................................................................................................................................